காஞ்சிபுரம்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதிச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு வரையறையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாநகராட்சிப் பதவிகளுக்கான திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டமானது திமுக வடக்கு மற்றும் திமுக தெற்கு என இரு மாவட்டச் செயலாளர்களைக் கொண்டுள்ளது. அதில் திமுக காஞ்சி வடக்கு மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாவட்டச்செயலாளராகவும், திமுக காஞ்சி தெற்கு மாவட்டத்திற்கு உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளனர்.
இந்நிலையில், நகரச்செயலாளர் பதவிக்கு பதில் காஞ்சிபுரம் மாநகராட்சி நான்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு நான்கு பகுதிச்செயலாளர்கள் உள்பட வார்டு வாரியாக செயலாளர், பொருளாளர், வட்டச்செயலாளர் போன்ற பதவிகளுக்கு காஞ்சிபுரம் டி.கே.நம்பி சாலையிலுள்ள திமுக காஞ்சி தெற்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில் வேட்பு மனு தாக்கல் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த பலதரப்பினரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதனிடையே வேட்பு மனுக்கள் அளிக்க வந்த திமுக காஞ்சி வடக்கு மாவட்டச்செயலாளரும், அமைச்சருமான தா.மோ. அன்பரசன் அவர்களின் ஆதரவாளர்கள் வேட்புமனு அளிக்க வரும்போது, மற்றொரு மாவட்டச்செயலாளரான க.சுந்தரின் ஆதரவாளர்களிடையே கடும் கோஷ்டி வாக்குவாதங்கள் ஏற்பட்டது.
குறிப்பாக இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆதரவாளரான திமுக நிர்வாகி முதியவர் ஒருவர், திமுக காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளரை கடுமையாகத் தகாத வார்த்தைகளால் வசைபாடியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி அழைத்துச்சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இரு மாவட்டச்செயலாளர்களின் ஆதரவாளர்களிடையே நடைபெற்ற இந்த வாக்குவாதத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் தலையிட்டு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பின், அங்கிருந்து அவர்கள் கலைந்துசென்றனர். இதனால், பெரும் பரபரப்பான சூழல் அங்கு நிலவியது.
இதையும் படிங்க: முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது - புகழேந்தி