காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞர் அணியினர் இதில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கி வந்தபோது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் 11ஆவது திமுக கவுன்சிலர் வீரபத்திரனின் மனைவி, தாய், சகோதரி மற்றும் வீரபத்திரனின் குழந்தைகள் ஆகியோர் அமைச்சர் காலில் திடீரென விழுந்து கண்னீர் மல்க கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
அப்போது அமைச்சரிடம், ”கடந்த ஏப்ரல் மாதம் கவுன்சிலர் தன் மீது கொலைவெறித்தாக்குதல் நடைபெற்றது. இதில் முக்கியகுற்றவாளி மதன்ராஜை ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் கைது செய்யவில்லை. மதன்ராஜின் மனைவி காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் தூண்டுதலின் பேரில் எங்களது குடும்பத்தினர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் பொய் வழக்குகள் பதிவு செய்கின்றனர்” என கவுன்சிலர் வீரபத்திரன் புகார் தெரிவித்தார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசுவதாகவும் மேற்படி எந்தப் புகாரும் உங்கள் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்படாது எனவும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் கவுன்சிலர் வீரபத்திரனிடம் தெரிவித்தார்.
திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சியின் முடிவில் திமுக கவுன்சிலர் வீரபத்திரனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அமைச்சர் காலில் விழுந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்போது தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் காவல் துறையினர், தங்கள் குடும்பத்தார் மீது பொய் வழக்குப் போடுவதாக ஆளும் திமுகவைச் சேர்ந்த திமுக கவுன்சிலரே அமைச்சரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்துள்ளது திமுக கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சி காமாட்சியை தரிசித்த நிர்மலா சீதாராமன்