பூந்தமல்லியிலிருந்து இண்டேன் நிறுவன சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அரக்கோணம் செல்வதற்காக சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேலூரிலிருந்து சென்னை மார்க்கமாக அmதிவேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் காரும் லாரியும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்த கார் ஓட்டுனரை போராடி மீட்டு ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வாகனங்களில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். விபத்தில் சிலிண்டர்களில் தீ பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்து தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துரிதமாக செயல்பட்ட பொதுமக்களால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டதில் பரபரப்பு ஏற்பட்டது.