நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணிகள் முழு வீரியத்தில் நடைபெற்றுவரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சிட்கோ எனும் பகுதியில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் உடைகள் (Cover All Dress) திறந்தவெளியில் கிடந்துள்ளது.
இதனால் பெரும் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், செய்வதறியாது சாலையோரம் கிடந்த, இந்த உடையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, இதையறிந்து அங்கு வந்த ஊராட்சி ஊழியர்கள் உடைகளை அப்புறப்படுத்தாமல், அங்கேயே வைத்து தீயிட்டுக் கொளுத்தினர்.
பின்னர், திருமுடிவாக்கம் ஊராட்சியில் பணிபுரிபவர்கள் உடையைப் பயன்படுத்திய பின் அப்படியே விட்டுச் சென்றார்களா அல்லது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையையொட்டி அமைந்துள்ள இந்த இடத்தில் ஆம்புலன்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்றவர்கள் வீசிச் சென்றார்களா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் முகக் கவசங்களையே பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவரும் நிலையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் உடைகள் திறந்த வெளியில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?