காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
அண்மையில் கேரளா சென்று விடுதிக்குத் திரும்பிய மாணவர்கள், சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 மாணவர்களும் தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாணவர்களின் நலன் குறித்து நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
மேலும் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தங்கிப்பயிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 235 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21 பெண்கள் 8 ஆண்கள் என 29 பேருக்கு நேற்றைய தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று(ஜூன் 09) மேலும் புதிதாக நான்கு பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இம்மையத்தில் தற்போது வரையில் 35 மாணவ மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மையத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் நிர்வாகமானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளை தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளது.
மேலும் 13ஆம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என உதவி பதிவாளர் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 144 பேருக்கு புதிதாக கரோனா தொற்று!