காஞ்சிபுரம்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு தளர்வுகளில், உயிரியல் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஒரு சில பகுதிகளை பார்வையிடத் தடை
இந்நிலையில் இன்று (ஆக.25) காலை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப பரிசோதனை செய்தல் உள்ளிட்டவற்றுக்குப் பின்னரே பூங்காவின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து பூங்காவில் ஒரு சில பகுதிகள் பார்வையிட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் குறைந்த அளவு பார்வையாளர்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளனர்.
7 ஆயிரம் பார்வையாளர்களுக்கே அனுமதி
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கருணபிரியா பேசுகையில், “கரோனா பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றி பார்வையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
பூங்கா வளாகத்தின் உள்ளே முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி பின்பற்றுமாறு, ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் உள்ளே பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளோம்.
பார்வையாளர்களை கண்காணிக்கவும் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 7 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே பூங்காவின் உள்ளே அனுமதிக்கப்படுவர்” என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறக்கும்போது அரசு வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு