காஞ்சிபுரத்தில் திருட்டு வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா உத்தரவின் பேரில், செவிலிமேடு பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் சார்பில் பொது மக்களுக்கான ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்குவதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர துணை கண்காணிப்பாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், நகரில் தனிமையில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நகர துணை கண்காணிப்பாளர் மணிமேகலை பேசியதாவது, “வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் பணத்தையும், நகைகளையும் வீட்டில் வைக்காமல் பாதுகாப்பாக வங்கியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சந்தேகத்திற்குரிய புதிய நபர்கள் யாரேனும் நகரில் சுற்றி திரிந்தால் அவர்களை பற்றிய விவரங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களுடைய புகைப்படங்களையும் காவல்துறையினருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்.
வெளியூர் செல்லும் வீட்டு உரினையாளர்கள், அவர்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு இது குறித்த தகவலை மறக்காமல் தெரிவிக்க வேண்டும். தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடியால் செல்போன் எண்ணிற்கு வரும் தேவையற்று குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
குறிப்பாக குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வில் காவல்துறை ஆய்வாளர்கள் நடராஜன், மைனர்சாமி, சுந்தர்ராஜன் மற்றும் காவல்துறையினர் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் சத்துமிகுந்த சிறுதானிய விழிப்புணர்வு வாகன பேரணி!