காஞ்சிபுரம்: வாலாஜாபாத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் இல்லத்தில் கடந்த 9 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திடீர் சோதனை நிறைவுபெற்றது. மேலும் வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாலாஜி நகரில் வசிப்பவர், தனியார் பள்ளி நிர்வாகி அஜய்குமார். இவர் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேவரியம்பாக்கம் கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர் இடங்கள் என 50-க்கும் மேலான இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
8 பேர் கொண்ட குழு
அவ்வகையில் வாலாஜாபாத்தில் உள்ள, அஜய்குமார் இல்லத்தில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வம் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி முதல் அவரது வீட்டிலுள்ள கணினியில் ஆய்வு மேற்கொண்டனர்; அஜய்குமாரிடமும் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் மாலை 4 மணி அளவில் விசாரணை நிறைவு பெற்றது.
முக்கிய ஆவணங்கள்
அதன்பின் அவரது வீட்டிலிருந்து இரண்டு பைகளில் சில முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்து, மேல் விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் எடுத்துச்சென்றுள்ளனர்.
அஜய்குமார் வீட்டில் கடந்த 9 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையானது நிறைவு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - அதிமுக கண்டனம்