காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதன் முறையான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதியன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியிலுள்ள 51 வார்டு பதவிகளுக்கு அதிமுக, திமுக, பாமக, மநீம உள்ளிட்ட பிரதான கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 314 பேர் களம் காணுகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36ஆவது வார்டில் அதிமுக சார்பில் ஜானகிராமன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் 36ஆவது வார்டின் அதிமுக வட்டச் செயலாளராக உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் சுப்புராயன் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜானகிராமன் இன்று (பிப்ரவரி 10) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜானகிராமனின் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தற்கொலை செய்துகொண்ட ஜானகிராமனின் தந்தை வேணுகோபால், “மக்கள் செல்வாக்கு மிக்கவர் எனது மகன் என்பதால் இத்தேர்தலில் எனது மகனை எதிர்த்துப் போட்டியிடும் நபர்களால் மிரட்டப்பட்டுள்ளார். மாற்றுக்கட்சியினர் மிரட்டல் காரணமாகத் தான் எனது மகன் தற்கொலை செய்திருப்பார்.
ஆகையால் அவரை மிரட்டியவர் யார் என விசாரித்து எனது மகனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனப் புகார் அளித்துள்ளார். மேலும், இதனையறிந்த அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் உள்ளிட்ட அதிமுகவினர் காவல் நிலையம் வந்தனர்.
மிரட்டல் காரணமாகத்தான் ஜானகிராமன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது தொலைபேசி எண்ணை ஆராய்ந்து குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல் நிலையம் முன்பு அமர்ந்து காவல் துறையினருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜானகிராமன் தற்கொலை சம்பவத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினரின் சுமுகப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலைக் கைவிட்டனர். மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமனின் தற்கொலைக்கு 36ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுப்புராயன்தான் காரணமென்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் காவல் துறையினரிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனியில் விதிகளை மீறி மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகார்: சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை