காஞ்சிபுரம்: தாம்பரம் அடுத்த மணிமங்கலம், சோமங்கலம், குன்றத்தூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மாமூல் வாங்குவது போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடி சச்சின் (27).
இவர், காவலர் ஒருவரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது, காவல் துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்று (செப். 28) தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “மாமூல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை பாயும்.
சோமங்கலம் பகுதியில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளில் சச்சின் மாமூல் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சோமங்கலம் காவல் துறையினர் சச்சினை தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் தனியார் கல்லூரி அருகே உள்ள காட்டுப் பகுதியில் அவரை காவல் துறையினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர் காவல் துறையினர் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசவே, அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் தற்காப்புக்காக சச்சினை, துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டினால், தொடையில் குண்டு பாய்ந்து வலியால் துடித்த ரவுடி சச்சின் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சச்சினுடன் இணைந்து காவல் துறையினரை கத்தியால் தாக்கிய அவரது நண்பர் பரத் என்பவர் தப்பியோடினார்.
இதனிடையே அவ்விரு ரவுடிகளின் தாக்குதலால் காயமடந்த காவலர் பாஸ்கர் என்பவர் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை!