நில முறைகேடு வழக்கில் நடிகர் விஷால் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேட்ட கேள்விகளும், நடிகர் விஷாலின் பதில்களும் பின்வருமாறு:
நடிகர் சங்க தேர்தலில் ரஜினி, கமல் எதிரெதிர் திசைகளில் இருப்பதாகவும், ரஜினி பாக்யராஜுக்கு ஆதரவாகவும், கமல் உங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தங்களின் கருத்து என்ன?
ரஜினி, கமல் அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும்வரை அது குறித்து வதந்தி பரப்ப வேண்டாம். நடிகர் சங்க தேர்தல் எப்போது நடந்தாலும் எதிரணி என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு அணியும் என்ன செய்திருக்கிறோம் என்பதை மற்ற நடிகர்களிடம் சொல்வது கட்டாயமாக இருக்கும். அதேபோன்று நாங்கள் என்ன செய்து இருக்கிறோம் என்பதையும் மற்ற நடிகர்களிடம் நாங்கள் பகிர்ந்துள்ளோம். அதன் அடிப்படையில் சக நடிகர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் சட்ட சிக்கல் விரைவில் முடியுமா?
நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் தடையாக வந்து அமைகிறது. அதில் ஏதேனும் ஒரு குறையை கண்டுபிடித்து அதற்காக தடை விதிக்கிறார்கள். அதையும் தாண்டி இந்த நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் எந்த விதிமீறலும் இல்லை என்பதை நிரூபித்து அதை நீதிமன்றத்தின் வாயிலாக வெளிக்கொண்டு வர கால தாமதம் ஏற்படுகிறது. நிச்சயமாக இந்த வருடம் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறும்.