காஞ்சிபுரம்: உதயகுமார் (45) என்பவர் குணகம்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மகாதேவிமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர், பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரை நாடி உள்ளார்.
அப்போது பட்டா மாற்றம் செய்து தருவதற்கு உதயகுமார் ரூபாய் 8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு 6 ஆயிரம் பணம் தருவதாக தினேஷ் தெரிவித்துள்ளார். அதன்பின் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தினேஷ், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தினேஷ் இன்று கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் அளித்தபோது மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய விஏஓ உதயகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் தொடர்ந்து அவரிடம் உள்ள முக்கிய ஆவணங்கள் பற்றிய தகவல்களை, அலுவலர்கள் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காக கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் உடன் பணிபுரியும் அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி: லாரி மோதி உயிரிழப்பு