காஞ்சிபுரம்: பாவாபேட்டை தெருவைச் சேர்ந்தவர் அயூப்கான்(48). இவருடைய மனைவி ராபியாபீவீ. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். அயூப்கான் கூலி அடிப்படையில் ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். நேற்று வெளியூருக்கு வேலை நிமித்தமாக சென்று வந்த அயூப்கான், 3000 ரூபாய் கூலி மற்றும் வேன் உரிமையாளரிடம் வாங்கிய பணம் 10,000 ரூபாய் என மொத்தம் 13 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
நள்ளிரவு நேரம் என்பதால் அயூப்கான் வேன் ஸ்டாண்ட் அருகே உள்ள அம்மா உணவகத்தின் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அயூப்கானை கற்களால் தாக்கியுள்ளனர். அதனால் அச்சமடைந்த அயூப்கான் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்திச் சென்ற மர்ம நபர்கள் ரங்கசாமி குளம் வளைவு சந்திப்பின் அருகே அவரை கொடூரமாகத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்த மர்ம நபர்கள் யார், பணத்திற்காக அயூப்கானை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற ரீதியில் 2 பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழவந்தாங்களில் மூதாட்டி கொடூர கொலை
இதேபோல், சென்னை பழவந்தாங்கல் அடுத்த தில்லை கங்கா நகர் 10வது தெருவில் சுந்தரி (வயது 81) அவரது மகன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவருடைய மகன் ஸ்ரீராம் பல்லாவரத்தில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் மகன் ஸ்ரீராம் மற்றும் மருமகள் பானுமதி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மூக்கில் ரத்ததுடன் இருந்த மூதாட்டி சுந்தரியை பலமுறை அழைத்தும் எழுந்துவராததால் சந்தேகம் அடைந்த அவருடைய மகன் பக்கத்தில் சென்று பார்த்த போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்ட இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கில் 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீடு கட்ட போலி பணி ஆணை தயாரித்த திமுக கிளைச் செயலாளர் கைது!