ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 776 ஏரிகள் தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 307 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 469 ஏரிகளும் என 776 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 64 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 59 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஏரிகள் 50 விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளன.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 16 ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாக உள்ளன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மையானதாக தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் 18 அடி ஆழத்தில் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க முடியும். ஏரியின் முழுக் கொள்ளளவான 18 அடியும், தற்போது நிரம்பி ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மற்றொரு மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரி 18.60 அடி ஆழம் கொள்ளளவு கொண்டதில் 15 அடி ஆழம் நீர் நிரம்பி உள்ளது. அதேபோல், உத்திரமேரூர் பெரிய ஏரி 20 அடி கொள்ளளவு கொண்டதில் 13.50 அடி நீர் நிரம்பி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.60 அடி ஆழம் கொண்டதில் 17.60 அடி முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது.
மணிமங்கலம் ஏரியில் 18.40 அடி கொள்ளளவு கொண்டதில் 18.40 அடி நீர் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. பிள்ளைபாக்கம் ஏரி 13.20 அடி கொள்ளளவு கொண்டதில் 13.04 அடி நீர் உள்ளது எனப் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
தொடர் மழையினால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காஞ்சி-செங்கை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முழுக் கொள்ளளவை எட்டிய 718 ஏரிகள்!