காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தில், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போரில் சண்டையிட்டு வீரமரணமடைந்த வீரர்கள் இருவர் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல், துண்டு கல்வெட்டுக்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் பேசுகையில், “கண்டெடுக்கப்பட்ட இந்த நடுகல்லானது 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்டது. இதில் ஆறு வரிகள் கொண்ட துண்டு கல்வெட்டும், இரண்டு வீரர்களின் உருவமும் இடம் பெற்றுள்ளது.
மெய்க்காப்பாளர்கள் நினைவாக...
இந்த நடுகல்லின் வலப்பகுதி முழுமையாக உடைந்துள்ளதால் முழுமையான கல்வெட்டாக இல்லை. முதல் வீரனின் உருவம் வலக்கையில் வளைந்த நிலையில் குறுவால் போன்ற ஆயுதத்தையும், இடது கையில் நீண்ட ஈட்டியை பிடித்த நிலையிலும் உள்ளது.
இவரது தலையில் கொண்டையும், கைமணிக்கட்டில் வளையங்களும், இடுப்பில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த குறுவால் உறை அடங்கிய அரை ஆடையும் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது வீரனின் உருவமானது இடக்கையில் நீண்ட நானுடன் கூடிய வில்லை ஏந்திய நிலையில் காணப்படுகிறது. வலது பக்கமுள்ள முதல் வீரனை பின்தொடர்ந்து செல்லும் நிலையில் உள்ளார்.
இதில் பொறிக்கப்பட்டுள்ள வரிகளைக் கொண்டு போரில் வீர மரணமடைந்த விஜயநகர மன்னர் கால ஆட்சியில் இருந்த குறுநில மன்னனின் மெய்க்காப்பாளர்களின் நினைவைப் போற்றும் வகையிலேயே நடுகல் எழுப்பப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தொல்லியல் துறையினர் உடனடியாக கவனம் செலுத்தி நடுகல்லை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும படிங்க: கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் சண்டையிட்ட கரடி!