காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குள்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிராமம் தபஸ்யா பார்க் மயிலை நகரில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடுகள் கட்டப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மாதவன் என்பவர் தனது சொந்த ஊரான கும்பகோணத்திற்குச் சென்றுள்ளார். அவரது மனைவியும் சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், யாரும் இல்லாததை அறிந்து பூட்டிய வீட்டில் நேற்றிரவு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி நகை, 42 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் அங்கிருந்து இரண்டு தெரு அருகே காட்டுமன்னார்கோவிலில் உள்ள பாவேந்தர் என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டிலும், பூட்டை உடைத்து 2.5 சவரன் தங்க நகை, எட்டாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய சிறிய அளவு கடப்பாரையை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து, விரைந்துவந்த காஞ்சிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் மணிமேகலை, தாலுகா காவல் துறை கைரேகை வல்லுநர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
வெளியூர் சென்றிருந்த இரண்டு நபர்களின் வீடுகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார் விபத்து; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி