காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு எம்.சாண்ட், ஜல்லிக் கற்கள் உள்ளிட்டப் பொருட்கள் அனுப்பப்படுகிறது.
தற்பொழுது ஆற்று மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்.சாண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கல்குவாரிகளின் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிறுதாமூர் கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த செல்வேந்திர குமார் என்பவரின் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் அரவை இயந்திரத்தைப் பயன்படுத்தி எம். சாண்ட் தயாரிக்கப்படுகிறது.
இக்குவாரியில், நேற்றிரவு(ஜுன்.7), பொக்லைன் இயந்திரம் மூலம், உடைந்த பாறை கற்களைச் சேர்க்கும் பணி நடந்துள்ளது. அப்போது, குவாரியில் ஒரு பகுதியின் மேல் இருந்த, பாறைக் கற்களோடு சேர்ந்த மண், திடீரென சரிந்தது.
இதில், வட மாநிலங்களான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷேர் அன்சாரி (24), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுனில்குமார் (26) ஆகிய இரு தொழிலாளர்களும், சுமார் 30 அடி மண்புதையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் களமிறங்கினர்.
ஆனால், விபத்துப் பகுதியில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளை அதிகாலையில் தொடங்க அலுவலர்களுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இருவரின் உடல்களை மீட்கும் பணி காலை முதல் நடைபெற்று வருகிறது.