கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான போரட்ட ஆயத்த மாநாடு மாநில துணைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு துறையில் அவுட் சோர்சிங் முறை, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள காலவரையற்ற மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,"தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110-விதியின் கீழ் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஒய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
மற்றொரு கோரிக்கையான 30 ஆண்டுகாலமாக ஒரே ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கான்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் போன்ற 3 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் எனவும் 110-விதியின் கீழ் அறிவித்தார்கள்.
அதை வழங்கக்கோரி, தற்போது செயல்பட்டு வரும் அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலீக்காமல் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் மறியல், தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பிப்ரவரி 2ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு