கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை திருச்சி-சேலம் நெடுஞ்சாலை அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் கட்டுவதற்கு 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. அதன்படி கோயில் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளைக் கடந்தாண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டி இருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஜூன்13) அதிகாலை முதல், சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க கோமாதா பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கோயில் கட்டுமானப் பணிகளை கண்காணிக்கும் தேவஸ்தான ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி தலைமையில், அறங்காவல் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கட்டுமான பணி தொடங்கியது.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்ணன், செந்தில்குமார் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பதவிகளை பெற்று செல்லும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்