பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் அத்திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், தியாகதுருகம் உள்ளிட்டப் பகுதிகளில் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு ரூ.1000 முதல் 1500 வரை பயனாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களின் எண்கள் மூலம் போலியான சிட்டாவைத் தயாரித்து அதன்மூலம் பல ஆயிரக்கணக்கானவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கிரண்குர்ராலா முதற்கட்டமாக சங்கராபுரம் பகுதியில் ஆய்வுமேற்கொண்டார். இதில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இணைய சேவை மையம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அதனைப் பூட்டி சீல்வைத்தார்.
மேலும், வங்கிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு இந்தத் திட்டத்தின்கீழ் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்றுவந்த விசாரணையை அடுத்து வேளாண்மைத் துறையினருக்குப் பயனாளிகளைத் தேர்வுசெய்து பட்டியல் தயாரிக்கும் இனணயத்தின் ரகசியக் குறியீட்டை வெளியிட உதவியாக இருந்தவர்கள், போலி பயனாளிகள் பெயரில் மோசடியாக பணம் செலுத்தியதை கவனத்தில்கொள்ளாமல் இருந்தது குறித்து, தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் அமுதா, ரிஷிவந்தியம் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ராஜசேகரன் ஆகியோரை கள்ளக்குறிச்சி வேளாண்மைத் துறை இணை இயக்குநர் வேலாயுதம் ஆகியோரைப் பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
இதேபோல் தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருவநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய அலுவலக ஒப்பந்த அடிப்படையில் கணினி பிரிவில் பணிபுரிந்துவந்த 13 பேரையும் மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம செய்ய உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாய ஆதரவு நிதியை இரண்டு லட்சம் பேர் முறைகேடாகப் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். முறைகேடாகப் பெறப்பட்ட நிதியிலிருந்து இதுவரை ஐந்து கோடியே 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து விரைவில் அனைத்து தொகையும் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் கணினி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.