கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம், சுண்ணாம்பு ஓடை அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் 16 வயது சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திகுத்துபட்டு உயிருக்குப் போராடியவாறு கிடந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற சின்ன சேலம் ஆய்வாளர் ராஜா, அச்சிறுமியை தூக்கியெடுத்து தனது வேனில் கூட்டிச் சென்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சி அருகே தொட்டியத்தில் காதலிக்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவியை, கழுத்தில் பிளேடால் கீறி கொலை செய்ய இளைஞர் ஒருவர் முயன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கு காரணமான குற்றவாளியை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! சர்வதேசப் பெண் குழந்தைகள் நாளில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது வேதனையளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுகள்.
ஒருதலைக் காதல் கும்பலின் தொல்லையால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லை தருவோருக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.