கள்ளக்குறிச்சி: வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டில் திமுக கட்சியினர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 11 இடங்களுக்கு நாளை (பிப்ரவரி 19) வாக்குப்பதிவு, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வடக்கனந்தல் பேரூராட்சியில் 3ஆவது வார்டில் பாமக கட்சி சார்பில் போட்டியிடும் கண்ணன் என்பவர் அந்தப் பகுதியில் வெற்றிபெறும் அளவிற்குச் செல்வாக்குமிக்கவர் எனக் கூறப்படுகிறது.
இதனால் இவரை சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் ஆதரவாளர்கள், வடக்கனந்தல் பேரூராட்சி முக்கிய திமுக பிரமுகர்கள் குதிரை பேரம் விலைபேசி திமுகவில் இணைத்துவிட்டதாகவும், அவரை பாமக வேட்டியை கழற்றிவிட்டு திமுக வேட்டி அணிந்து செல்ல திமுகவினர் நிர்ப்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து வடக்கனந்தல் பேரூராட்சியில் அம்மாபேட்டை பகுதியில் உள்ள சாலையில் திடீரென ஒன்றுகூடி 50-க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திமுக கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து பாமகவினர் கூறுகையில், வடக்கனந்தல் பேரூராட்சிகள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மிரட்டப்பட்டுவருவதாகவும், கண்ணனை மிரட்டி திமுக பக்கம் இழுத்து விட்டதாகவும், இது குறித்து பாமக தலைமையிடம் சொல்லி விரைவில் போராட்டம் நடத்தப்படும். காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத கும்பல்