கள்ளக்குறிச்சி: சென்னை புறவழிச்சாலை திடல் அருகே கடந்த 15ஆம் தேதி முதல் ‘கல்லை புத்தகத் திருவிழா’ நடைபெற்று வந்தது. நேற்றுடன் (டிச.26) நிறைவடைந்த இந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் முதல்முறையாக கூட்டாக நடத்திய புத்தகத் திருவிழா, கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
சுமாா் 100 அரங்குகளுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், சுமாா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இங்கு அமைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் சுமாா் 6,000 பெண்கள் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.
புற்றுநோய், மகப்பேறு பரிசோதனைகள் போன்ற மருத்துவப் பரிசோதனைகளில் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டு, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர். இத்தகைய நிகழ்வில் 106 பேருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டு, முறையான சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை புத்தக காட்சி: வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு