கள்ளக்குறிச்சி: துருகம் சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (டிசம்பர் 23) நடைபெற்றது. விழாவில் 68 ஆயிரம் 879 நபர்களுக்கு 192 கோடியே 49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மஞ்சப்பை - மங்கலகரம்
அப்போது அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், “மகளிர் சுய உதவிக் குழுக்கள் திமுக ஆட்சியில்தான் வளர்த்தெடுக்கப்பட்டன. அதற்கு முக்கியக் காரணம் தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின்தான்.
ஒரு காலத்தில் வாக்குச் செலுத்தும் உரிமையானது பட்டா நிலம் வைத்துள்ள ஆண்களுக்கு மட்டும் என இருந்ததை மாற்றி, உலகத்திலேயே முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது திராவிட இயக்கம், பகுத்தறிவு நீதிக்கட்சியுள்ள இந்த மண்தான்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான். ஆணுக்குப் பெண் சமமென, பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு எனச் சட்டம் இயற்றப்பட்டதும் அவரது ஆட்சிக் காலத்தில்தான்.
தமிழ்நாடு மங்கலகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, முதலமைச்சர் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் இன்று தொடங்கியுள்ளார்” என்றார். பின்னர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இதையும் படிங்க: மஞ்சப்பை சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் - ஸ்டாலின்