கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 119 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தச்சூர், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் மருத்துவ வசதிகளுடன் கூடிய மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தற்போது கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் குணமடைந்துள்ளனர். இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) முருகேசனை மருத்துவர்கள் அழைத்தனர்.
ஆனால், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அலுவலகத்தை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். இதனால் அரசு மருத்துவர்கள் பழமலை, நேரு, செந்தில்ராஜா மற்றும் செவிலியர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
அதேசமயம், கரோனா காலத்தில் வீட்டிற்குச் செல்லாமல் சேவை செய்துவரும் செவிலியருக்கு முருகேசன் விடுப்பு வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணம் செய்த நிலையில் காதல் ஜோடி தற்கொலை...!