கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால் உலகங்காத்தான், பொற்படக்குறிச்சி, இந்திலி ஆகிய கிராமங்களுக்கு மட்டும் கால்வாய் வசதி சீரமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேற்றப்படுவதில்லை.
இதுகுறித்து உரிய அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மூன்று கிராம மக்களும் ஒருங்கிணைந்து கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக மனு அளிப்பதற்காக வந்தனர்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் மக்களை சந்திக்க மறுத்ததால் வேறு வழியில்லாமல் சார் ஆட்சியரிடம் மனுவை வழங்கினர். அந்த மனுவில், “கோமுகி அணையிலிருந்து எங்கள் கிராமங்களுக்கு செல்லும் கால்வாயை சீரமைத்து தண்ணீர் வர நடவடிக்கை எடுத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பயனடையும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.