கள்ளக்குறிச்சி: பொங்கல் பண்டிகையை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வித விதமான மண்பானைகள் தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையில் (Pongal Festival), புது பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, மண்பானைகள் விற்பனையும் அதிகரிக்கும், இதையடுத்து திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் களிமண்ணால் பானைகளை தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பல மாவட்டங்களில் புதுமண தம்பதியினருக்கு பெண்வீட்டு பொங்கல் சீர்வரிசையுடன் வண்ணக்கோலமிட்ட மண்பானைகளையும் பரிசாக வழங்கும் பழக்கம் இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகள் திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
திடீர் மழையால் மண்பானை தயாரிப்பு முடங்கிப்போகும் சூழல் இருப்பதாக கூறும் இந்த மண்பாண்டத் தொழிலாளர்கள், தங்கள் பகுதியில் மண்பானை தயாரிப்புக்கு என பிரத்யேக கொட்டகை ஒன்றை அமைத்து தரவேண்டும் எனவும்; மண்பாண்டம் செய்வதற்கு ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவியூரை சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர்களின் வாரிசுகள் பலர் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் ஓய்வு நேரங்களில் மண்பாண்டத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை