கள்ளக்குறிச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 2018ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தி. வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு, அந்தச் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
இத தொடர்பாக வேல்முருகன் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஐந்து பேர் மட்டுமே முன்னிலையானார்கள். அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்பட ஒன்பது பேர் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன், வேல்முருகன் உள்பட ஒன்பது பேருக்குப் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி பட்ஜெட்: தமிழில் உரை நிகழ்த்தும் தமிழிசை