கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முத்து மகன் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ரீ- சைக்கிளிங் கம்பெனி விருத்தாசலம் சாலையில் உள்ள காட்டு நெமிலி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் குடோனில் டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றிரவு (நவ.1) குடோன் வெளியே கிடந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில், பற்றி எரிந்த நெருப்பில் நிறுவனத்தின் உள்ளே இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருள்களும் தீப்பிடித்து எரிந்தது.
மளமளவென பற்றிய நெருப்பு பெரும் புகையுடன் அனல் வீசத் தொடங்கியதைக் கண்ட நெமிலி கிராம மக்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை, மங்கலம் பேட்டை, திருநாவலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட தீய ணைப்பு வாகனங்கள் மூலம் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு (நவ.1) 9 மணியிலிருந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக கரும்புகையுடன் தீ பற்றியதால், உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இரவு 2 மணி வரை போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயாகுமார் மற்றும் காவலர்கள் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேல் யாத்திரை சென்றாலும் பாஜக வெற்றி பெற முடியாது - தா.பாண்டியன்