கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன் (60). இவர் பிஇஎம்எஸ் எனும் சித்த மருத்துவம் படித்துவிட்டு, கூகையூர் கிராமத்தில் ஐயப்பன் கிளினிக் என்ற பெயரில் கடந்த 28 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருகிறார்.
அத்துடன் பொற்செழியன் யூ-ட்யூப், ஃபேஸ்புக்கில் 'சாப்பாட்டு ராமன்' என்ற பெயரில் கணக்கைத் தொடங்கி அதிகப்படியான வீடியோக்களை வெளியிட்டு வலைதளங்களில் பிரபலமானார். இவர் தனது வீடியோவில் கிலோ கணக்கில் அனைத்துவகை இறைச்சிகளையும் சாப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
இதனால், இவர் தற்போது யூ-ட்யூப்பில் 10 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறார்.
இவ்விவகாரத்தில் இவர் கூகையூர் கிராமத்தில் போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக கள்ளக்குறிச்சி உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கூகையூர் கிராமம் வந்த காவல் துறையினர், பொற்செழியனை நேற்று (மே 27) அவரது கிளினிக்கில் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
பின்னர், அவரைக் கைது செய்த காவல் துறையினர், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இதையும் படிங்க: 7 பெண் கைதிகளை விரைந்து விடுதலை செய்க - உயர் நீதிமன்றம்