கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த துரைராஜ், கட்சி பணிகளை சரியாக செய்யவில்லை எனக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
புதிதாக இந்த பதவிக்கு சந்திரசேகர் என்பவரை தலைமை கழகம் நியமித்தது. இந்த நிலையில் இவர் கழக நிர்வாகிகளோடு ஒருங்கிணைத்து செல்லாததாலும் துரைராஜை பதவியிலிருந்து விடுவித்ததை கண்டித்தும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 64 கிளை செயலாளர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் இந்த உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.