கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். திமுக பிரமுகர். இவர் நேற்று (ஆக.21) மாலை வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு பார்த்திபனின் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். உடனடியாக தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பணம், நகைகள் நாசம்
தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இந்தத் தீ விபத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 பவுன் தங்க நகைகள், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருநாவலூர் காவல் துறையினர், தீ விபத்துக்கு காரணமான நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு!