சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பது உறுதியானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, 2ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் இன்று (ஜூலை 17) கூறும்போது, 'தற்போது காவல் துறையினர் விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. காவலர்களுடன் இணைந்து மாவட்டத்திலுள்ள கல்வி அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விசாரணையின் முடிவில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால், துறை ரீதியாக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வது என நடவடிக்கைகள் அமையும் என தெரிகிறது.
இதையும் படிங்க: மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு சாலை மறியல்!