கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் வார்டு உள்ளது. இங்கு உடையநாச்சி, வெள்ளிமலை, எடுத்தவாய்நத்தம் உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பிறந்த குழந்தைகளுடன் தாய்மார்கள், குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் திருமணமாகி 7ஆண்டுகள் கழித்து பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை நேற்று (மே 18) திடீரென மூச்சுத் திணறி இறந்தது. இதனையடுத்து குழந்தைகள் வார்டு அருகே கரோனா மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதே குழந்தையின் இறப்புக்குக் காரணம் எனக்கூறி, இறந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதனையடுத்து குழந்தையின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.