கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வராயன்மலையில் 15 ஊராட்சிகளில் 45 கிராமங்கள் உள்ளன. இதில் வேங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட பெரியபலாபூண்டி, பொற்பம் ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நிலவும்அடிப்படை பிரச்சினைகள் குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, வெள்ளேரிக்காடு முதல் பொற்பம் வரை பெரியபலாபூண்டி முதல் தும்பை, பொற்பம் முதல் துரூர் வரையிலான வழித்தடத்தில் தார்ச்சாலை அமைத்தல், மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குதல், மலைவாழ் மக்களை தவிர்த்து மற்றவர்களுக்காக மேற்கொள்ளப்படும் பத்திரபதிவுகளை தடுத்து நிறுத்துதல், விவசாய பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் வாகனங்களை தடை செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு கிராம மக்களும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்த புகார்மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமை தேர்தல் ஆணையர், தொகுதி தேர்தல் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனுவாக அளித்துள்ளனர். மேலும், அனைவரது வீடுகளின் முன்பும் தேர்தல் புறக்கணிப்பு நோட்டீஸ் ஒட்டியும், கறுப்புக்கொடி ஏற்றியும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.