ஈரோடு அருகேயுள்ள சூரம்பட்டி இந்திராகாந்தி வீதி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த இவர் கடந்த பல ஆண்டுகளாக ஈரோடு சம்பத்நகர் பகுதியில் ஷேர்கேர் என்கிற பெயரில் பங்குச்சந்தை வணிகம் நடத்தி வந்துள்ளார்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் முதலீட்டுத் தொகையை அதிக வருவாயை ஈட்டும் ஷேர்களை வாங்கி வைத்தும், விற்பனை செய்தும் வந்துள்ளார். மேலும் நரசிம்மன் தனது தொகையையும் பங்குச்சந்தை வணிகத்தில் முதலீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே நரசிம்மன் வாங்கி விற்பனை செய்யும் பங்குகள் அதிக வருவாயின்றி இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பதில் கூற வேண்டுமே என்றும், குடும்பத்தை நடத்தி விட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்கிற மனக்கவலையிலும் ஆழ்ந்திருந்தார்.
இதனிடையே நேற்றிரவு(செப் 23) வீட்டில் யாருமில்லாமல் தனியாக இருந்தபோது பங்கு வணிகத்தில் இதுவரையில்லாமல் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்ட கவலையில் வீட்டிலிருந்து மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் இன்று(செப் 24) அதிகாலை வீட்டுக்கு வந்து மனைவி பார்த்த போது தனது கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சூரம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் நரசிம்மனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் இளைஞரைக் கொலை செய்தவர்களின் சிசிடிவி காட்சி சிக்கியது!