ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைகிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள கிராமங்கள் பெரும்பாலும் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அவ்வப்போது யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி, விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில், கானக்குந்தூர் பகுதியில் வனத்தைவிட்டு கூட்டமாக வெளியேறிய 10 யானைகள், கிராமத்தை ஒட்டி உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக கடம்பூர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த கடம்பூர் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிராம மக்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து யானைக் கூட்டத்தை சுமார் ஒருமணி நேரம் போராடி அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். விளை நிலங்களில் யானைகள் புகுந்து சென்றதால் அங்கு தற்போது பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்கள் சேதம் அடைந்தன.
பகல் நேரத்தில் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:போட்ஸ்வானாவில் தொடரும் பேரழிவு - 275க்கும் அதிகமான யானைகள் உயிரிழப்பு!