சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு மூத்த நிர்வாகியும், ஈவெரா திருமகனின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவனைக் களமிறக்கியுள்ளது. அவருக்கு ஆதரவாக திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர் முத்துசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஏற்கனவே தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், அமமுக சார்பில் விளையாட்டு வீரரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளருமான சிவபிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமையன்று அக்கட்சியின் மாநில நிர்வாகியான மேனகாவை வேட்பாளராக அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஆனால், அதிமுக கூட்டணியில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் உள்ளது. இடைத்தேர்தலுக்கான தொடக்கத்திலேயே அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்திருந்தனர்.
அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகச் செயல்படுவதால் பாஜக என்ன நிலைப்பாட்டை எடுக்க உள்ளது என்பது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. ஏதேனும் ஒரு அணிக்கு ஆதரவு தெரிவித்தால் மற்றொரு அணியினரைப் பகைத்துக் கொண்டது போன்று ஆகிவிடும் என பாஜக கருதுகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் ஈபிஎஸ் இரட்டை இலையை ஒதுக்கக் கோரி முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் பாஜக வட்டாரங்களில் இடைத்தேர்தல் குறித்து என்ன நிலைப்பாடு எடுக்க உள்ளது என விசாரித்தோம்.
அப்போது, "அதிமுகவின் தலைமை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்தகட்ட முடிவினை தலைமை எடுக்க இருக்கிறது. ஈபிஎஸ்க்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால் இரட்டை இலை சின்னம் அவரது அணிக்கு ஒதுக்கப்படும். இரட்டை இலை சின்னம் யார் பக்கத்தில் இருக்கிறதோ, அவர்களுக்கே பாஜகவின் ஆதரவு இருக்கும்" என தெரிவித்தனர். ஒரு வேளை ஓபிஎஸ் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், "பாஜக தனித்து வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் யாருக்கு.? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..