சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 215ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ தனியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர் தியாகி தீரன் சின்னமலை. முழு ஊரடங்கு காலத்திலும் அரசின் அனுமதியுடன் தீரன் சின்னமலையின் வீரவணக்க நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுதான் நமது தலையாய கடமையாகும்.
சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களை சாதி அமைப்புகளுக்குள் அடக்கி பார்க்கும் அவலம் அரங்கேறுவது வருத்தம் அளிக்கிறது. சாதி, மத பாகுபாடோடு தலைவர்களின் சிந்தாந்தங்களை பார்க்கும் மதவாத சக்திகளின் போக்கு தலைதூக்கி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும், அதிமுக அரசு சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டது. பெரியார், அண்ணாவின் திராவிட சித்தாத்தங்களில் இருந்து உருவானதுதான் அதிமுக என்பதால், பெரியார், அண்ணாவின் சிலைகளை அவமதித்த சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையானது ஏழை, எளிய மக்களுக்கு எதிராக உள்ளது. இது உழைக்கின்ற மக்களுக்கு கிடைக்கின்ற கல்வியை பாதிக்கின்ற கொள்கையாக உள்ளது. எனவே மத்திய பாஜக அரசு இந்த மும்மொழி கொள்கையை ரத்துசெய்து திரும்பப் பெறவேண்டும்.
புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை சட்டரீதியாக எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை: அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை!