ஈரோடு: பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டாம் போக கடலை, எள் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து பவானிசாகர் அணையில் இன்று (ஜன 21) பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்புப் பூஜைகள் செய்து அணை கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரைத் திறந்துவிட்டனர். முதலில் 500 கன அடியும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வாய்க்காலில் 2300 கன அடியாகத் திறந்துவிடப்படும்.
அணையிலிருந்து வாய்க்காலில் சீறி பாய்ந்து வந்த தண்ணீரில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். இந்த நீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஜனவரி 21 முதல் மே 1 ஆம் தேதி வரை குறிப்பிட்ட தேதியில் இடைவெளிவிட்டு 90 நாள்களுக்குக் கடலை,சோளம் மற்றும் எள் சாகுபடி செய்ய 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும்.
இரண்டாம் போகத் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர், உள்ளாட்சி பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் இன்றி எளிமையான முறையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதையும் படிங்க: கொடைக்கானல் ஏரியை தூர்வாரும் பணியில் ராட்சத இயந்திரம்!