அரசியல், வணிகம் என அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது விளம்பரங்கள் தான். கடந்த காலத்தில் பிரபலமாக இருந்த சுவர் விளம்பரங்கள் பிளக்ஸ் பேனர்களின் வரவால் நலிவடைந்தன. இதனால் இத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் மாற்று தொழிலை நாடிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை தொடர்ந்து பெரும்பாலான அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைப்பதில்லை என முடிவு செய்துள்ளனர். இதனால் சுவர் விளம்பரங்கள் மீண்டும் பிரபலமடைய தொடங்கியுள்ளன.
இது அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உற்சாகமடைய செய்துள்ளது. பிளக்ஸ் பேனரின் வரவால் நலிவடைந்திருந்த தங்களின் தொழில் தற்போது மீண்டும் வளர்ச்சி பெற்று வருவதாகவும் மற்ற தொழிலுக்கு சென்ற பெயிண்டிங் தொழிலாளர்கள் மீண்டும் இத்தொழிலுக்கு திரும்பியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தற்போது ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் திரைப்பட நடிகர்களின் பிறந்தநாள் விழாக்கள், அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அறிவிப்புகள் சுவர் விளம்பரங்களாக வரையப்பட்டு வருகின்றன.
பிளக்ஸ் பேனர் வரவால் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்த சுவர் விளம்பரங்கள் தற்போது பேனருக்கு தடை உத்தரவால் மீண்டும் பிரபலமடைந்து வருவதாக இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.