நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தாளவாடி மலைப்பகுதிக்கு 66 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கடம்பூருக்கு 25 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடக்கம். இந்த வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சி முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 294 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக பயன்படுத்தும் 42 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தினர். அதையடுத்து, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சீல் வைத்து பூட்டினர்.
பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் விஜய் சங்கர், தேர்தல் நடத்தும் கூடுதல் உதவி அலுவலர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முகவர்கள் கலந்துகொண்டனர்.
தேர்தலுக்கு முந்தைய நாளான 17ஆம் தேதி மீண்டும் முகவர்கள் முன்னிலையில் இந்த அறை திறக்கப்பட்டு அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி வைக்கப்பட்ட அறை முன் துப்பாக்கிய ஏந்திய காவல் துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.