சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் உலகையை உலுக்கியுள்ளதால் சீனாவில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர்.
இதனிடையே சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கரோனோ வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனாவிலிருந்து இந்தியா திரும்புவோர் சிறப்பு மருத்துவ முகாம்களில் வைத்து அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சீனாவிலிருந்து தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதேபோன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த தோல் தொழில் செய்துவரும் பிரபாகரன் என்பவர் கடந்த ஜனவரி 26ஆம் தேதி சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுவிட்டு விமானம் மூலம் பெங்களூரு வழியாக கடந்த நான்காம் தேதி ஈரோடு திரும்பினார். தொடர்ந்து அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டதால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அலுவலர்கள் பிரபாகரனை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சீனாவில் தங்கி படித்துவந்த ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்று மருத்துவக் குழுவினர் கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ‘மாணிக்கம் தாகூர் மக்களவையில் யாரையும் தாக்கவில்லை’ - ராகுல் காந்தி