ஆன்லைனில் பழைய அல்லது புதிய பொருட்களை மக்கள் விற்பனை செய்யும் தளமாக திகழும் ஓ.எல்.எக்ஸில், பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், கடல் பொருட்களை கடத்தி வந்து ஓ.எல்.எக்ஸில் விற்பனை செய்ய முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஓ.எல்.எக்ஸ் தளத்தில் பவளபாறைகள், கடல் விசிறி, மாட்டுத்தலை சங்கு உள்ளிட்ட பல்வேறு கடல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பதிவு ஒன்று உலாவியுள்ளது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், மத்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு அலுவலர்களும், வன உயிரின சரக அலுவலர்களும் இணைந்து விசாரணை நடத்தினர்.
அதில், இந்த அறிவிப்பை ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்த வீரராஜ்குமார், நகுலேசன் ஆகிய இருவரும் பதிவிட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியிலிருந்து கடல் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல் பொருட்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நூதன முறையில் பணமோசடி: நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர் புகார்!