ஈரோடு: ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் கடந்த 21ஆம் தேதி, காரில் கோவை நோக்கி சென்றார்.
அப்போது, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் காரை வழிமறித்து அவரை தாக்கி காரை கடத்திச் சென்றது. அடுத்த சில மணி நேரத்தில் சித்தோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீட்கப்பட்டது.
காரில் 2 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும், மர்ம கும்பல் அதனை கொள்ளையடித்துச் சென்றதாகவும் விகாஷ் பரபரப்பு புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சித்தோடு போலீசார், இதில் தொடர்புடையவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சித்தோட்டில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் வீச்சரிவாள், உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்துள்ளன.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல் முஜிப் ரஹ்மான், முஜூபூர் ரஹ்மான் உள்ளிட்ட ஆறு பேர் என்பதும் கடந்த 21-ம் தேதி காரை வழிமறித்து இவர்கள் பணத்தை கொள்ளையடித்துச்சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது.
அதைப் போலவே மற்றொரு கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டு வந்ததையும் கண்டுபிடித்த போலீசார், ஆறு பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனையைக் கண்டதும் இந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த ஐந்து பேர் தப்பித்து தலைமுறைவாகினர். அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உண்மையில் 21-ம் தேதி கடத்திச்சென்று கொள்ளையடித்த காரில் 2 கோடி ரூபாய் பணம் இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.