கரோனா தீநுண்மி (வைரஸ்) காரணமாக நாடு முழுவதும் கைக்கழுவுதல், முகக்கவசம் பயன்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் மக்கும், மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் வாங்கி, நகராட்சிக் குப்பைக் கிடங்கில் பிரிக்கின்றனர்.
மேலும் பொதுமக்களிடம் வாங்கும்போது நோய்த்தொற்றைத் தடுப்பதற்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியபோதிலும் குப்பை பக்கெட் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் நேரடியாகக் குப்பை வண்டியில் போடுவதற்கு வசதியாகவும், குப்பை வண்டியை தூக்கி கொட்டுவதற்கும் இறக்குவதற்கும் ஏதுவாகவும் புதிய முயற்சியாக ஹைட்ராலிக் வண்டியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
இருவர் மட்டும் அமரக்கூடிய இந்த வண்டி மழை, வெயிலைத் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பையை மனித உழைப்பால் சேகரித்து கொட்டும் முறையை மாற்றி, குப்பை வண்டி நேரடியாகக் குப்பைக் கிடங்குகளில் தூக்கி கொட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தூய்ம்மைப் பணியாளர்கள் கைகளால் பயன்படுத்தும் முறை தவிர்க்கப்படுவதால், நோய்த்தொற்றையும் தடுக்க முடியும் என்ற நோக்கில், தற்போது சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் உள்ள 30 ஊராட்சிகளுக்கு இந்த நவீன வண்டியை அரசு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுயர மரவள்ளிக்கிழங்கு - ஆர்வமுடன் ரசித்த மக்கள்!