ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இவைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், திம்பம் மலை உச்சியில் இருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியின் வழியே செல்லும் சாலையில், தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
இந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பெஜலட்டி மலைகிராமத்தை ஒட்டியுள்ள வனச்சாலையில் பகல் நேரங்களிலும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால், மலை கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், சாலையில் செல்வோரை கரடிகள் தாக்க வாய்ப்புள்ளதால், பகல் நேரங்களில் பயணிப்போர் மிகவும் கவனத்துடன் பயணிக்குமாறும், இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.