ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை கொளங்காட்டு வலசு பகுதியில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்றிரவு (மார்ச் 30) நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஈரோடு – பழனி மெயின்ரோட்டில் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, காளிபாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர், ஈரோட்டிலிருந்து அவல்பூந்துறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொளாங்காட்டு வலசு அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தீர்த்தம் எடுத்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து தறிகெட்டு ஓடியது. பின்னர், அங்கிருந்த 2 இருசக்கர வாகனங்களின் மீது மோதிவிட்டு, மரத்தின் மீது இடித்து நின்றது.
இவ்விபத்தில், தீர்த்தக்குடம் எடுத்துச்சென்ற வடக்கு வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், கண்ணம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அத்துடன், காரில் சென்ற யுவராஜ், அவரது மனைவி பாத்திமா மற்றும் மகன்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரச்சலூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பழனிசாமி என்பவர் உயிரிழந்தார்.
மேலும், காயமடைந்த யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அரச்சலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்ட்க: வாணியம்பாடி அருகே கார் மீது லாரி மோதியதில் இருவர் படுகாயம்!