ஈரோடு: திறமையான வேட்டைக்காரனாக, தன்னை எதிர்ப்பவர்களை கொலை செய்து அவர்களது உடல்களை துண்டு துண்டாக வெட்டி காவிரி நதி மீன்களுக்குப் போட்ட கொடூர கொலைகாரனாக, காட்டு யானைகளை கொன்று தந்தங்களைக் கடத்திய கொள்ளைக்காரனாக, சந்தன மரக் கடத்தல்காரனாக வீரப்பனை பற்றிய பல கதைகள் வீரப்பன் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், நமது மத்தியில் இன்னும் உயிர்ப்போடு வலம்வந்துகொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தக் கதைகளெல்லாம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால், வீரப்பனைத் தேடிச்சென்ற காவலர்களாலும் வனத்துறையினராலும் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதைகள் மெல்ல மெல்ல மறக்கப்பட்டுவிட்டன. 1993ஆம் ஆண்டு வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநில அரசுகளும் கூட்டு ஒப்பந்தத்தின் பேரில், சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைத்து, மலையோர கிராமங்களில் வீரப்பனைத் தேடி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, வீரப்பனின் நடமாட்டமுள்ள மலையோர கிராம மக்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று, முகாம்களில் வைத்து பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி பெண்கள், கேட்டாலே நெஞ்சை நடுங்கச் செய்யும் கொடூர சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஆண்கள் என வனங்களிலும் மலையடிவாரங்களிலும் வாழும் மக்கள் ஏராளம்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலை கிராமத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை குழுவினர், மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களை எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.
இதில் பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்த அழகுத்தான்படி என்பரை வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கியதாகக் கூறி, அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர், வீரப்பன் இருக்கும் இடத்தை கேட்டு, பல சித்ரவதைகளைச் செய்துள்ளனர். மேலும் அவரை நிர்வாணப்படுத்தி கை,கால்களைக் கட்டி உடலில் மின்சாரம் செலுத்தி, துன்புறுத்தி உள்ளனர். இதே போன்று தொடர்ந்து 10 மாதங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார், அழகுத்தான்படி.
ஆனால், உடலில் மின்சாரம் செலுத்தியது காரணமாக இன்றளவும் எந்த விதமான உடல் உழைப்பும் செய்ய முடியாமல்; அவதிப் பட்டு வருவதாகவும், தமிழக அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும்; வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட அழகுத்தான்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் வீரப்பன் அலைந்து திரிந்ததாகச் சொல்லப்படும் வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள கிராமங்கள் அனைத்திலும் இதுபோல ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. நெடுங்காலமாக இந்த வலிகளையும் வேதனைகளையும் தங்களது மனதில் ஆராத வடுக்களாய் சுமந்துகொண்டு நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இவர்கள்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!