ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேருக்கு கையுறை, முகக் கவசங்கள், பிஸ்கட் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு உதவிப் பொருள்களை வழங்கினர். அதையடுத்து அனைவருக்கும் முட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்ளைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "கரோனா பாதுகாப்பில் உழைக்கும் மக்களுக்கு உதவி செய்யும் விதமாக, மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளது. சத்தியமங்கலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை கரோனா பிரச்னைகள் ஓய்ந்தபின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. அந்த முயற்சிக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் அச்சமின்றி தேர்வை சந்திக்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் பத்திரிக்கையாளர்களுக்கு கரோனா பரிசோதனை - அமைச்சர் நேரில் பார்வை